தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
அத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது. வெளியூரில் இருந்த வந்த பக்தர்கள் தங்க இடம் கிடைக்காமல் அவதிக்கு உள்ளானார்கள்.
கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதனால், விஐபி தரிசனம் நேற்று 2 மணியுடன் நிறைவுபெற்றது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடைசி நாள் என்பதால் பக்தர்கள் கூட்டம் இன்று காலை முதலே அதிகரித்து காணப்படுகிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்று 6 மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் 3 கூடாரங்களும், கோவிலை ஒட்டி 3 கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிக்கு வரும் பக்தர்கள்கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டு, பின் பேருந்துகள் மூலம் அத்திவரதர் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, 17ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.