கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நடவடிக்கையால் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் 99.3 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாகவும் ஆர்பிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இன்றோடு இரண்டாண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், பண மதிப்பிழப்பு நடந்து 2 வருடம் முடிந்துள்ள நிலையில் என்ன மாற்றம் வந்துள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், சிறந்த தீர்ப்பு வழங்குபவர்கள் மக்கள்தான். சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விடை 2019-ம் ஆண்டு தெரியும் என்றார்.
மேலும், சர்கார் படம் குறித்து பேசிய அவர், திரைப்படம் எடுப்பவர்கள், நடிகர், நடிகைகளுக்கு இப்போது ஒரு பேஷனாகி விட்டது. ஜெயலலிதா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது. அவர் இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா? என்று யோசியுங்கள்.
இவர்கள் எல்லாம் அவர் இருக்கும்போதே எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதலமைச்சர் கேரக்டர் எடுத்து நல்லது செய்ய வேண்டும் என்பது போல பல ஆசைகள் இருக்கும். அது தவறு இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் தீர்மானம் செய்வதுதான்.
அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.
ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த திரைப்பட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.