This Article is From Mar 07, 2020

பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு: ரஜினிகாந்த் பேட்டி

60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியலிலிருந்து சம்பாதித்தது இரண்டு தான். அவை மதிப்பு மற்றும் மரியாதை.

பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு: ரஜினிகாந்த் பேட்டி

அருமை நண்பர் தளபதியாருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

ஹைலைட்ஸ்

  • பேராசிரியர் அன்பழகனின் இழப்பு பெரிய இழப்பு - ரஜினிகாந்த்
  • எழும்பும், நரம்பும், சதையும் கொண்ட உடல் மறைந்துவிடும்- வைரமுத்து
  • பேராசிரியர் அரசியலில் இருந்து சம்பாதித்தது இரண்டு தான் - ரஜினி.

பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகப்பெரிய இழப்பு என கீழ்ப்பாக்கம் இல்லத்தில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் .ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் (97) உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவரது உயிர் பிரிந்தது. கடந்த மாதம் 24ம் தேதியன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குக் கடந்த சில நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கண்காணிக்கப்பட்டு வந்தார். அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்து, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் உயிர் பிரிந்தது.

இதனைத்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, 2.30 மணியளவில் அன்பழகனின் உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. 

இதையடுத்து, பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த் பேராசிரியர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர் அரசியலிலிருந்து சம்பாதித்தது இரண்டு தான். அவை மதிப்பு மற்றும் மரியாதை. அவரை இழந்துவாடு அவரது குடும்பத்தாருக்கும், என்னுடைய அருமை நண்பர் தளபதியாருக்கும், கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

கவிஞர் வைரமுத்து கூறியதாவது, எழும்பும், நரம்பும், சதையும் கொண்ட உடல் மறைந்துவிடும், அழுகிவிடும், எரிக்கப்பட்டுவிடும் அல்லது புதைக்கப்பட்டு விடும். ஆனால், கொள்கை, எண்ணம், லட்சியம், வேட்கை உள்ளிட்ட இந்த தத்துவங்கள் அழிவதில்லை. பேராசிரியர் தத்துவமாக வாழ்கிறார். அவர் தத்துவமாக வாழ்ந்துகொண்டே இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். 

.