உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது
Thiruvalla/Thiruvananthapuram: அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, மூன்றாவது முறையாக கோயில் நடை வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டது. இந்நிலையில் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றன இந்து அமைப்புகள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய வேதி அமைப்பின் மாநில தலைவர் கே.பி.சசிகலா வெள்ளி இரவு கைது செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு சீர்கைலையக் கூடாது என்கின்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக இந்த கைது நடந்தது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாநிலம் தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்தன இந்து அமைப்புகள்.
இதையடுத்து இன்றும் பல அமைப்புகள் கேரளாவின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக இன்று போராட்டக் களத்தில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. திருவல்லாவுக்குப் பக்கத்தில் இருக்கும் நெடுஞ்சாலையை 150 பாஜக-வினர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், நிலக்கல்லில் இருந்து சபரிமலைக்குச் செல்ல முயன்றார். அப்போது அவரை மாநில காவல் துறையினர் தடுத்து, திரும்பிப் போகுமாறு தெரிவித்தனர். அவர் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து மலைக்குச் செல்ல முனைப்பு காட்டினார். இதனால், அவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் பாஜக-வினர் கொதிப்பில் இருக்கின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, உச்ச நீதிமன்றம், ‘அனைத்து வயதுப் பெண்களும் ஐயப்பன் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்யலாம்' என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து இதுவரை ஐயப்பன் கோயில் 3 முறை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை.
மகரவிளக்கு' பூஜைகளுக்காக வெள்ளி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் திறந்த நிலையில் தான் இருக்கும்.
உச்ச நீதிமன்றம், உத்தரவுக்குப் பிறகு சபரிமலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால், இதுவரை ஒரு இள வயது பெண் கூட கோயிலுக்குள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.