காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது தொடர் விவாதம் மூலம் உருவாக்கப்பட்டது. பல லட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்புதான் அது- ராகுல் காந்தி
New Delhi: 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர், ‘குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்திருப்பவர்களால் வறுமையை ஒழிக்க முடியாது' என்று காங்கிரஸை மறைமுகமாகத் தாக்கினார். அதற்கு பதிலடி தரும் வகையில் இன்று கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது தொடர் விவாதம் மூலம் உருவாக்கப்பட்டது. பல லட்சம் இந்தியர்களின் பிரதிபலிப்புதான் அது. அது சாத்தியப்படக் கூடியது. சக்தி வாய்ந்தது.
ஆனால், பாஜக தேர்தல் அறிக்கை என்பது பூட்டப்பட்ட ஓர் அறையிலிருந்து உருவாக்கப்பட்டது. தனித்துவிடப்பட்ட ஒரு மனிதரின் குரலாக அது உள்ளது. குறுகிய பார்வை கொண்டதாகவும் வீம்புமிக்கதாகவும் அது இருக்கிறது' என்றார்.
பாஜக அறிக்கையில், தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம், தீவிரவாதத்துக்கு எதிராக கறாரான நடவடிக்கை, வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக, சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட வழக்கமான வாக்குறுதிகளும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
நாடாளுமன்றத் தேர்தல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், பாஜக, தேர்தல் அறிக்கையை கடைசி நேரத்தில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், அந்த அறிக்கையில் ஆக்கபூர்வமாகவும் புதியதாகவும் ஒன்றுமில்லை என்று எதிர்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், ‘வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் 20 சதவிகித மக்களுக்கு ஆண்டுக்கு 72,00 ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் வழங்கும் திட்டம், எளிமைபடுத்தப்பட்ட ஜி.எஸ்.டி முறை, மீன் வளத் துறைக்கு தனி அமைச்சகம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு' உள்ளிட்ட வாக்குறுதிகள் இருந்தன.