This Article is From Feb 25, 2019

லஞ்சம் வாங்கு்பவர்களை தூக்கில் போட வேண்டும்: உயர்நீதிமன்றம்

லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும் அல்லது அவர்களின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்து தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் வாங்கு்பவர்களை தூக்கில் போட வேண்டும்: உயர்நீதிமன்றம்

மதுரையைச் சேர்ந்த பரணி பாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், மின்வாரியத்தில் புதிதாக 325 உதவி பொறியாளர்களுக்கான அறிவிப்பாணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அப்போது, எழுத்துத் தேர்வுக்கு முன்பாகவே கேள்வித்தாள் வெளியானது.

மின் வாரியத்தில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கேள்வித்தாளை வழங்கிவிட்டார்கள். அதனால், உதவிப் பொறியாளர் நியமனத்தை நிறுத்தி வைக்க வேண்டும். எழுத்துத் தேர்வுக்கான ஆணையை ரத்து செய்து புதிதாக தேர்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் - சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெறுவது கொடிய குற்றம் என்று நீதிபதிகள் மிகவும் காட்டமாக தெரிவித்தனர்.

மேலும் அரசு துறைகளில் அனைத்து நிலைகளிலும் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளது எனவும், அதிகாரிகள் லஞ்சம் பெறுவது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது எனவும் நீதிபதிகள் கூறினர்

அதோடு, லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். லஞ்சம் வாங்குபவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். பின்னர், வழக்கை மார்ச் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

.