This Article is From May 09, 2020

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து துரோகம் இழைத்திடும் செயல்; மு.க ஸ்டாலின் தாக்கு!

நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களே கூட, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மவுனமாக வேதனையுறும் நிலையில் மக்களுக்குத் துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை மட்டுமின்றி ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்ப பெற வேண்டும்

எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து துரோகம் இழைத்திடும் செயல்; மு.க ஸ்டாலின் தாக்கு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில்…

“நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-2022) மட்டும் நிறுத்துவதாக அறிவித்து, இப்போது 2019-20 ஆம் ஆண்டிற்கான நிதியையும் ரத்து செய்யும் சுற்றறிக்கையை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அனுப்பியிருக்கிறது. “

“பொருளாதாரத்தைச் சீர் செய்யவோ, நிவாரணம்  வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் பறிப்பது வேதனையானது. மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல். பணிகள் துவங்கிவிட்ட நிலையில் கொடுத்ததைப் பாதியில் பறிப்பது பண்பாடாகாது. “

“எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.“

“நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களே கூட, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் மவுனமாக வேதனையுறும் நிலையில் மக்களுக்குத் துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை மட்டுமின்றி ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்ப பெற வேண்டும்.“ என குறிப்பிட்டுள்ளார்.

.