This Article is From Sep 20, 2018

ஜெ., சிகிச்சைப் பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் நீக்கம்: அப்போலோ பகீர் தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016, செப்டம்பர் 22-ல் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

ஜெ., சிகிச்சைப் பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகள் நீக்கம்: அப்போலோ பகீர் தகவல்

30 நாட்களுக்கு ஒருமுறை சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டுவிடும், அப்போலோ

Chennai:

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக அப்போலோ மருத்துமவனை நிர்வாகம் பகீர் தகவல் தெரிவித்துள்ளது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2016, செப்டம்பர் 22-ல் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5, 2016-ல் அவர் மறைந்தார். அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்பட்ட தமிழக அரசு, அது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. அந்த ஆணையம் இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவர் அங்கு தங்கி இருந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தானாக நீக்கப்பட்டுவிட்டதாக விசாரணை ஆணையத்திடம் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையின் வழக்கறிஞர் மைமூனா பாட்ஷா, ‘அப்போலோ மருத்துவமனையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், 30 நாட்களுக்கு ஒரு முறை தானாக நீக்கப்பட்டுவிடும். இது அங்கு வெகு நாட்களாக இருக்கும் ஒரு நடைமுறை’ என்று தெரிவித்துள்ளார். 

ஆறுமுகசாமி ஆணையம், அப்போலோ நிர்வாகத்திடம் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை சமர்பிக்குமாறு முன்னர் கேட்டிருந்தது. அதற்குத் தான் இப்படிப்பட்ட பதிலை அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் குறித்து முன்னர் பேசிய அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டி, ‘அது டெலீட் செய்யப்பட்டு விட்டது’ என்று கூறினார்.

அவரின் கருத்து குறித்து பாட்ஷா, ‘அது வேறு ஒரு விவகாரம் சம்பந்தப்பட்டது’ என்று மட்டும் தெரிவித்துள்ளார். 

.