New Delhi: சமீப காலமாக சமூக வலைதளங்கள் மூலம் போலி செய்திகள் பரவுவதால், சட்ட ஒழுங்கு பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதைத் தொடர்ந்து போலி செய்திகளை பரப்புவதை தடுக்கும் வகையில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ‘அந்நிறுவனங்கள் தவறான செய்திகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் மத்திய அரசு மிக கறாரான நடவடிக்கைகளை எடுக்கும்’ என்று அரசு அதிகாரி ஒருவர் நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற மிகவும் ட்ரெண்டிங்கான சமூக வலைதளங்களுக்கு இது குறித்து தெரியபடுத்தப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப் மூலம் பரவும் போலி செய்திகளால், நாட்டின் பல இடங்களில் கும்பல் வன்முறை நடந்துள்ளது. அதேபோல ட்விட்டரில் விடுக்கப்படும் வெறுப்புக் கருத்துக்கும், பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் பயந்து பலர் அந்த தளத்திலிருந்து விலகியுள்ளனர்.
வாட்ஸ்அப் செயலியை இந்தியாவில் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அந்த செயலி மூலம் பரவும் போலி செய்திகளை கட்டுப்படுத்த, யார் அப்படிப்பட்ட செய்தியை அனுப்புகிறார் என்பதை ட்ராக் செய்யச் சொன்னது மத்திய அரசு. இதற்கு வாட்ஸ்அப் மறுத்துள்ளதால், அரசு தரப்பு அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.
அதேபோல வாட்ஸ்அப் நிறுவனத்திடம் மத்திய அரசு, குறைகளை கேட்டறியும் ஒரு அதிகாரியை நியமிக்குமாறு கூறியது. இது குறித்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
சமீக காலமாக நாட்டின் பல்வேறு இடத்தில் நடந்த கும்பல் வன்முறையை அடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. அந்த கமிட்டி அளித்த பரிந்துரையில் தான், சமூக வலைதள நிறுனங்கள், போலி செய்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்மிடம் பேசிய அரசு அதிகாரி, ‘இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். சர்ச்சைக்குரிய பதிவுகள், செய்திகளை நீக்குவதில் ஒரு வரையறையை வகுத்துள்ளோம்’ என்றுள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலம் பரவும் போலி செய்திகள் குறித்து மக்கள் தனிப்பட்ட முறையில் புகார் கூற, ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரி முடிவாக, ‘சமூக வலைதளம் என்பது நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக் கொள்வதில்லை. மாறாக சமூக வலைதளங்கள் மூலமே உரையாடுகின்றனர். எனவே, ஆன்லைனில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள கேட்-கீப்பர்கள் அவசியம்’ என்று கூறினார்.