தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது, வெப்பச்சலனம் ஏற்பட்டு வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி இருப்பதாலும், வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளதாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா - 5 செ.மீ., சின்னக்கல்லார் - 3செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இதனால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.