மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த புதிய கல்விக்கொள்கை வரைவில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பதிவில், பிரதமர் மோடியை 'டேக்' செய்து, பிற மாநிலங்களில், தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும். விருப்ப மொழியாக தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பது, உலகின் சிறந்த மொழிக்கு செய்யும் சிறந்த சேவையாகும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, மும்மொழி கொள்கையை தமிழக முதல்வர் ஆதரிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. முதலைமச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, இந்தி மொழி தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பதிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, முதல்வர் ஒரு ட்விட் போட்டதன் அடிப்படையில் அது அரசியலாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்தையும் அரசியல் ஆக்குவது தான் வழக்கமாக உள்ளது.
பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக கொண்டு வர வேண்டும், உலகின் தொண்மையான மொழிக்கு கவுரவமாக இது அமையும் என்றே அவர் தெரிவித்துள்ளார். தமிழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற அடிப்படையிலே அவர் அந்த ட்விட்டை போட்டார்.
நல்ல அடிப்படையில் போட்ட ட்விட்டை திரித்து அரசியலாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. எந்த நிலையிலும், எந்த ரூபத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.