This Article is From Feb 04, 2019

‘பாஜக-வாவது, மம்தாவாவது..!’- இருவரையும் சாடும் சீதாராம் யெச்சூரி

பாஜக-வுக்கு எதிராக மம்தா ஈடுபட்டு வரும் தர்ணா போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

‘பாஜக-வாவது, மம்தாவாவது..!’- இருவரையும் சாடும் சீதாராம் யெச்சூரி

மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு நாட்டின் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

New Delhi:

பாஜக-வுக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வரும் தர்ணா போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி. 

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேற்று விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது  செய்தனர். சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு தரப்பு, மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இது குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் நடந்தன. 

கொல்கத்தாவின் இப்படிப்பட்ட பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த யெச்சூரி, ‘சிட் பண்டு ஊழல் குறித்த புகார் கடந்த பல ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது. ஆனால், இதுநாள் வரை அது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல், பாஜக தற்போது செயல்படுகிறது. அதற்கு திரிணாமூல் காங்கிரஸ் தலைமை, தர்ணா நடத்தி தங்களின் ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற பார்க்கிறது. 

பாஜக-வும் திரிணாமூலும் நடத்தும் இந்த அரசியல் போர், ஒன்றும் கொள்கைக்காக நடத்தப்படுவதில்லை. தங்கள் தரப்பு ஊழல்வாதிகளை காப்பாற்றவே இரு கட்சிகளும் போராடி வருகின்றன. இந்த இரு சக்திகளையும் எதிர்த்து சிபிஎம் கட்சி தொடர்ந்து செயலாற்றி வந்துள்ளது. அதை தொடர்ந்து செய்வோம்' என்று இரு தரப்பையும் கடுமையாக சாடியுள்ளார். 

அதே நேரத்தில் மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு நாட்டின் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தேசிய கான்ஃபரன்ஸ் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் மம்தா-வை போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். 

அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ட்விட்டர் மூலம் மம்தாவுக்குத் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். 

.