This Article is From Feb 25, 2019

“டெல்லியில் கூட்டணிக்கு காங்கிரஸ் சம்மதிக்கவில்லை!”- கெஜ்ரிவால் வருத்தம்

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, டெல்லியில் மொத்தம் இருக்கும் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலை தனித்து சந்திக்க நாங்கள் தயாராகி வருகிறோம், கெஜ்ரிவால்

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் நாங்கள் தனித்து நிற்போம், கெஜ்ரிவால்
  • மோடி அரசை நீக்குவதே எங்கள் பிரதான நோக்கம், கெஜ்ரிவால்
  • சமீபத்தில்தான் ராகுல், மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து பேசினர்
New Delhi:

தலைநகர் டெல்லியில் காங்கிரஸ்தான் கூட்டணிக்குச் சம்மதிக்கவில்லை என்று NDTV-யிடம் அளித்த பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால். 

காங்கிரஸுடனான கூட்டணி குறித்து அவர் பேசுகையில், “டெல்லியில் காங்கிரஸ் தனியாக தேர்தலை சந்திக்கத்தான் ஆர்வமாக இருக்கிறது. அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருப்பதாக தெரிகிறது” என்று கூறினார். 

அவர் மேலும், “காங்கிரஸுடன் எங்களுக்கு பல்வேறு விஷயங்களில் முரண் இருந்தாலும், நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படவே விரும்பினோம். தற்போதைய சூழலில் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாதான். அவர்கள் பதவியிலிருந்து இறக்கப்பட வேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்த நாட்டிற்கு இழைத்த பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டனர். ஒரு வெறுப்பு அரசியலை அவர்கள் ஊக்குவிக்கிறார்கள். பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க எடுத்த முயற்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில் மோடி அரசு நடந்து கொண்டது. இந்த அரசை வீழ்த்த என்ன வேண்டுமானாலும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். மற்றப்படி காங்கிரஸ் மீது எங்களுக்கு எந்தப் பாசமும் இல்லை” என்றார். 

சமீபத்தில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் ஒரே இடத்தில் சந்தித்து ‘மெகா கூட்டணி' குறித்து பேசினர். ஆனாலும், காங்கிரஸ் தரப்பு கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார். 

இந்த விவகாரம் குறித்து இறுதியாக கெஜ்ரிவால், “காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துப் போட்டியிட்டு எதிர்கட்சிகளின் கரத்தை வலுவிழக்கச் செய்து வருகிறார்கள்” என்று முடித்தார். 

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, டெல்லியில் மொத்தம் இருக்கும் 7 தொகுதிகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 


 

.