ராஜஸ்தான் மக்கள் தான் ராஜேவுக்கு எதிராக தற்போது போட்டியிடப் போகின்றனர், பைலட்
ஹைலைட்ஸ்
- ராஜஸ்தானில் காங்கிரஸ் பிரசாரத்துக்கு பைலட் தான் தலைமை தாங்குகிறார்
- ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது, கருத்து கணிப்புகள்
- பாஜக-வுக்கு எதிராக ராஜஸ்தானில் அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது
New Delhi: ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 200 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 7 ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும், காங்கிரஸுக்கும் இடையில் அங்கு கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் என்.டீ.டி.வி-யிடம் பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், ‘முதல்வர் வசுந்தரா ராஜே கடந்த தேர்தலின் போது 611 வாக்குறுதிகளை கொடுத்தார். அது என்ன ஆனது?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ‘ராஜே கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை செயல் முறைக்கு வந்தன. மாநிலத்தில் 15 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று அவர் சொன்னார். ஆனால், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் ஒரு பெண். ஆனால், தினம் தினம் 8 முதல் 10 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன.
ராஜஸ்தான் மக்கள் தான் ராஜேவுக்கு எதிராக தற்போது போட்டியிடப் போகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக மிகவும் எதேச்சதிகார போக்கிலான அரசு ஆட்சி செய்து வந்தது. விவசாயிகள் தற்கொலை, விவசாயத்தின் நிலை, வேலை வாய்ப்பின்மை, ஊழல் ஆகியவை குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவை அனைத்துக்கும் எதிராக ராஜஸ்தான் மக்கள் தான் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் தான் அவர்கள் போராட இருக்கும் ஒரே கருவி' என்று பேசியுள்ளார்.
ராஜஸ்தான் காங்கிரஸின் இரண்டு பெரும் புள்ளிகளான அசோக் கெலோட் மற்றும் சச்சின் பைலட் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளனர். இருவருக்கும் முதல்வராகும் எண்ணம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் காங்கிரஸிற்குள் உட்கட்சிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம் எனப்படுகிறது.
அதே நேரத்தில் 5 மாநில சட்டசபைத் தேர்தல்களைப் பொறுத்தவரை, ராஜஸ்தானில் மட்டும் தான் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.