This Article is From Apr 07, 2020

ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.

ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்
  • கொரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன.
  • மரணங்களில் இருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்துவிட்டு, ஊரடங்கை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 621-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-லிருந்து 6-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது, கொரோனா பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் இணைந்து முழு வீச்சில் கொரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற, தேவைப்பட்டால் ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.

ஆனால், அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கொரோனா மரணங்கள் மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன. சிகிச்சையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் திடீரென உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றன.

இத்தகைய மரணங்களில் இருந்து பாடம் கற்க வேண்டியதும் கட்டாயமாகிறது. மேலும், சென்னை போன்ற இடங்களில் இப்போது வெறுமனே வீடு, வீடாக சென்று கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று கேட்டுவிட்டு கையெழுத்து வாங்குவதற்குப் பதிலாக, கொரோனா பாதிப்பை அரை மணிநேரத்தில் கண்டறியும் உபகரணம் வந்த பிறகு இந்த ஆய்வினை மேற்கொண்டால் சந்தேகப்படுபவரை அதே இடத்தில் சோதிக்க முடியும்.

இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு அரசு எந்திரத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக முக்கியமானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

.