தேசிய அளவில் பொருளாதாரம் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு முடக்க உத்தரவு (LOCKDOWN) நடவடிக்கை கராணமாக பொருளாதார நிலைமை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசு ஏப்ரல் 20க்கு பிறகு கொரோனா தொற்று மிக குறைவாக உள்ள இடங்களிலும், தொற்று பாதிப்பு இல்லாத இடங்களிலும் முழு முடக்க நடவடிக்கையிலிருந்து சில தளர்வுகளை அனுமதிப்பதாக தெரிவித்திருந்தது. மாநில அரசுகளுக்கு இது குறித்த வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கியிருந்தது.
கேரளா இரண்டு பகுதிகளில் தளர்வுகளை அமல்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 3 வரை தொடரும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
15.4.2020 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, மகாராஷ்ட்ரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைபிடிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சரிடம் இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் ஆராயப்பட்டு
அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மை சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020ஆம் தேதி வரை தொடர்ந்து கடைபிடிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அரசால் அளிக்கப்பட்ட விதி விலக்கு தொடரும் என்றும் நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையினை பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.