This Article is From Nov 03, 2018

ம.பி தேர்தல்: உச்சத்தில் காங்கிரஸ் உட்கட்சி மோதலா..!?

இந்த வேட்பாளர் பட்டியல் வெளியீட்டால் காங்கிரஸின் இரு தரப்பிற்கிடையே உட்கட்சி மோதல் வலுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது

ம.பி தேர்தல்: உச்சத்தில் காங்கிரஸ் உட்கட்சி மோதலா..!?

திக்விஜய சிங்கிற்கும் ஜோதிராதித்யா சிங்கிற்கும் இடையில் பிரச்னை எனத் தகவல்

ஹைலைட்ஸ்

  • பிரச்னையை சமாளிக்க ராகுல் குழு அமைத்துள்ளதாக கூறப்படுகிறது
  • முதற்கட்ட வேட்பாளர் பட்டியலால் தான் பிரச்னை எழுந்துள்ளதாக தெரிகிறது
  • வரும் 28 ஆம் தேதி ம.பி-யில் தேர்தல் நடக்க உள்ளது
Bhopal:

மத்திய பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மாநில காங்கிரஸ். ஆனால், இந்த வேட்பாளர் பட்டியல் வெளியீட்டால் காங்கிரஸின் இரு தரப்பிற்கிடையே உட்கட்சி மோதல் வலுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச காங்கிரஸில் திக்விஜய சிங்கிற்கும், ஜோதிராதித்தியா சிந்தியாவுக்கும் இடையில் வெகு நாட்களாக கருத்து மோதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. திக்விஜய சிங் மூத்த தலைவர் என்றால், சிந்தியாவுக்கு ராகுல் காந்தியுடன் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. இவர்கள் இருவரது பிரச்னையை சமாளிக்க இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலை கமல்நாத்தின் தலைமையில் காங்கிரஸ் சந்திக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு சிந்தியா மற்றும் சிங் ஆகிய இருவரும் ஆதரவு தெரிவித்தனர். அனைத்தும் காங்கிரஸுக்கு சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மீண்டும் கோஷ்டி மோதலை உண்டாக்கி இருப்பதாக தெரிகிறது.

வேட்பாளர் பட்டியலில் சிந்தியா, தனது ஆதரவாளர்கள் பலரின் பெயர் வரும்படி பார்த்துக் கொண்டதாகக் கூறி சிங் பிரச்னை கிளப்பியுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தை சமாளிக்க கட்சியின் மூத்த தலைவர்களை நியமித்துள்ளார் தலைவர் ராகுல் காந்தி.

உட்கட்சி குழப்பம் குறித்து தகவல் கசந்ததை அடுத்து சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த சந்திப்பில் எனக்கும் சிந்தியாவுக்கு கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது முற்றிலும் தவறான தகவல்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

2003 முதல் மத்திய பிரதேசத்தில் பாஜகதான் ஆட்சியில் இருந்து வருகிறது. அதை இம்முறை முடிவுகட்ட காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டுள்ளது. வரும் நவம்பர் 28 ஆம் தேதி மாநிலத்தில் இருக்கும் 230 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

பாஜக-வை ஓரங்கட்ட நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் காங்கிரஸ், கட்சிக்குள்ளேயே பிரச்னையை சமாளிக்க முடியாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

.