புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு, மத்திய அரசிடமிருந்து 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது ஹைலைட்ஸ்,
ஹைலைட்ஸ்
- 3 லட்சம் பேருக்கு மேல் கஜாவால் வீடு இழந்துள்ளனர்
- கஜாவால் 11 லட்சம் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன
- நிவாரண நிதியாக தமிழகம், ரூ.15,000 கோடி கேட்டுள்ளது
Chennai: ஒரேயொரு குடிசை வீடு. 50 வயதாகும் ஃபாரிதாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சொந்தமாக இருந்தது ஒரேயொரு குடிசை வீடு. தற்போது கஜா புயலால் அந்த வீடும் இல்லாமல் நிலைகுலைந்துள்ளனர். வீட்டருகிலிருக்கும் நெடுஞ்சாலையில் குடும்பத்துடன், யாராவது உதவி செய்வார்களா என்று ஏங்கிக் காத்துக் கிடக்கின்றனர்.
மாற்று உடை கூட இல்லையென்று குமுறிய ஃபாரிதா, தனது சோகத்தை நம்மோடு பகிர ஆரம்பித்தார். “எங்களுக்கு குறைந்தபட்சம் ஒரேயொரு வீடு வேண்டும். எதையாவது சமைத்துச் சாப்பிட எங்களுக்கு ஒரேயொரு இருப்பிடம் வேண்டும். கெஞ்சிக் கேட்கிறோம், எங்களுக்கு ஒரேயொரு வீட்டைக் கட்டித் தாருங்கள்' என்று கதறுகிறார்.
கஜா புயலின் தாக்கத்தினால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வீதிக்கு வந்த 3 லட்சம் பேரில் ஃபாரிதாவும் ஒருவர்.
நாகையைச் சேர்ந்த 40 வயதாகும் குணசேகரனோ, தனது தென்னந் தோப்பு, தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்த்து திகைத்துப் போயுள்ளார். குடும்பத்துடன் குணசேகரன் வாழ்ந்த வீடும், புயலினால் பாதிக்கப்பட்டதால், எப்போது மேற்கூரை விழும் என்ற பயத்துடன் இருந்து வருகின்றனர்.
இரண்டிலும் குணசேகரனை கலங்க வைப்பது, தென்னந் தோப்புக்கு ஏற்பட்டச் சேதம்தான். “இப்போது நான் ஒரு தென்னை மரத்தை வைத்தால் கூட, அது முன்பு இருந்தது போல் வளர 20 ஆண்டுகள் ஆகும். நான் இன்றே ஒரு தென்னங்கண்ணை வைத்தால் கூட, 10 ஆண்டுகளுக்கு என்னால் அறுவடை செய்ய முடியாது. 10 ஆண்டுகள்… அதுவரை நாங்கள் என்ன செய்யப் போகிறோம்' என்று வினவுகிறார்.
பல குடும்பத்தின் கதையைத் தான் குணசேகரனும், ஃபாரிதாவும் பிரதிபலிக்கின்றனர். கஜா புயலினால், தமிழகத்தில் 11 லட்சம் மரங்கள் வேறோடு சாய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளப்பாலம் மீனவ கிராமத்திலேயோ, கஜா வேறு முறையில் வாட்டியெடுத்துள்ளது. இந்த ஒரு கிராமத்தில் மட்டும் 300 படகுகளை கபளீகரம் செய்துள்ளது கஜா. அந்த கிராமத்தின் கடற்கரையில் சிதலமடைந்த படகுகளின் பாகங்கள் தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிகின்றன. கஜாவால், கிராமத்தில் யாரும் இறக்கவில்லை என்றாலும், அது ஏற்படுத்திய பேரழிவு என்பது 2004 சுனாமியின் கோர நினைவலைகளை மீட்டெடுப்பதாக சொல்கின்றனர் கிராமத்தினர்.
‘சுனாமி வந்த போது கூட நாங்கள், எங்களிடமிருந்த 20 சதவிகித படகுகளைக் காப்பாற்றினோம். ஆனால், இப்போது ஒன்று கூட மிச்சமில்லை. ஒரே வித்தியாசம், நாங்கள் அனைவரும் உயிரோடு இருக்கிறோம். அந்த ஒரு காரணத்திற்காக அரசங்கத்துக்கு நாங்கள் நன்றி சொல்லிக் கொள்கிறோம்' என்று வெள்ளப்பாலம் கிராமவாசி தங்கவேல் விளக்குகிறார்.
கஜா புயலால் வீடிழந்த 1 லட்சம் பேருக்குக் கான்க்ரீட் வீடு கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு, மத்திய அரசிடமிருந்து 15,000 கோடி ரூபாய் கேட்டுள்ளது.
கஜா நிவாரணம் குறித்து மாநில சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “நிவாரணப் பணிகளை போர்க் கால அடிப்படையில் செய்ய, தமிழக முதல்வர் 15 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளார். இயல்பு நிலை திரும்பும் வரை நாங்கள் 24 மணி நேரமும் உழைப்போம்' என்று கூறியுள்ளார்.