This Article is From Aug 22, 2019

“சுவரை எகிறிகுதித்த அதிகாரிகள்…”- ப.சிதம்பரம் கைதின் போது என்ன நடந்தது..?

INX Media Case P Chidambaram: செவ்வாய் கிழமை முதல், சிபிஐ, டெல்லியில் இருக்கும் சிதம்பரத்தின் வீட்டுக்கு 2 முறை சென்று, 2 லுக்-அவுட் நோட்டீஸை கொடுத்துள்ளது

P Chidambaram INX Media: அமலாக்கத் துறையும், சிதம்பரத்துக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை கொடுத்திருந்தது.

ஹைலைட்ஸ்

  • சிதம்பரத்துக்கு எதிராக 2 லுக்-அவுட் நோட்டீஸை கொடுத்தது சிபிஐ
  • சிதம்பரம், நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்
  • சிபிஐ, அமலாக்கத் துறை சிதம்பரம் வீட்டுக்கு வந்தது. சிபிஐ கைது செய்தது
New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்தது. அதைத் தொடர்ந்து சுமார் 24 மணி நேரத்துக்கு அவர் பொதுவெளியில் காணவில்லை. இப்படிபட்ட சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக டெல்லியில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்குச் சென்று செய்தியாளர்களை சந்தித்தார் சிதம்பரம். தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகள், ப.சிதம்பரத்தைக் கைது செய்ய வீட்டின் சுவரை எகிறி குதித்தது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது. 

நேற்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு சிதம்பரம் வந்துள்ளார் என்று தகவல் தெரிந்த சிபிஐ, அங்கு விரைந்தது. அவர்கள் அங்கு செல்வதற்கு முன்னர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் மூத்த அதிகாரிகள் கிளம்பவிட்டனர். 

இதனால் சிபிஐ அதிகாரிகள், டெல்லியின் ஜோர் பாக்கில் இருக்கும் சிதம்பரம் வீட்டுக்கு விரைந்துள்ளனர். அவர்கள் வருவதற்கு முன்னரே, அங்கு டெல்லி போலீஸ் மற்றும் அமலாக்கத் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். சிதம்பரம் வீட்டின் பிரதான நுழைவாயில் வழியாக சிபிஐ அதிகாரிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி கொடுக்கவில்லை. அப்போதுதான் சிதம்பரம் வீட்டின் சுவரை எகிறி குதித்து உள்ளே சென்றிருக்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள். 
 

பாக்கியிருந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டின் பின்புறம் வாயிலாக உள்ளே சென்றனர். வீட்டின் கதவுகள் சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே திறக்கப்பட்டது. உடனே சிபிஐ, சிதம்பரத்தைக் கைது செய்தது. 

வீட்டிற்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள் சிதம்பரத்தின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்ததைப் பொருட்படுத்தாத சிபிஐ, தங்களது தலைமை அலுவலகத்துக்கு அவரைக் கொன்று சென்றது. 

சிதம்பரத்தைக் கைது செய்ய 3 சிபிஐ குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு டெல்லி போலீஸும் உதவிபுரிந்துள்ளனர். சி.ஆர்.பி.எஃப் படைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரத்தின் வீட்டுக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். 

ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு, ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிழமை முதல், சிபிஐ, டெல்லியில் இருக்கும் சிதம்பரத்தின் வீட்டுக்கு 2 முறை சென்று, 2 லுக்-அவுட் நோட்டீஸை கொடுத்துள்ளது. அமலாக்கத் துறையும், சிதம்பரத்துக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை கொடுத்துள்ளது. லுக்-அவுட் நோட்டீஸ், ஒரு நபர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காகக் கொடுக்கப்படுவதாகும். 

செய்தியாளர்கள் சந்திப்பில் சிதம்பரம், “நாங்கள் எல்லோரும் வழக்கை எதிர்கொள்ளத்தான் விரும்புகிறோம். யாரும் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. சட்டத்திலிருந்து நான் ஒளிந்து கொள்வதாக குற்றம் சாட்டப்படுவதை மறுக்கிறேன். நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். தெளிவான தீர்க்கமான பார்வையுடன் என் மீதான விமர்சனங்களை எதிர்கொள்வேன். விசாரணை அமைப்புகள் சட்டத்தின்படி செயல்படும் என்று நம்புகிறேன். இதற்காக பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

.