பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 8வது நாளாக நடந்து வருகிறது.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று பணியில் சேராவிட்டால், பணியாற்றிய இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது. எனினும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஆதரவாக திட்டமிட்டபடி நாளை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தலைமைச் செயலக ஊழியர் சங்கமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது, கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.
பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித்தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல் என்று அவர் தெரிவித்துள்ளார்.