This Article is From Aug 06, 2020

இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது; உடனடியாக ரத்து செய்க: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

மத்திய அரசே இ-பாஸ்‌ நடைமுறை கட்டாயம்‌ இல்லை என்று அறிவித்த பிறகு - அதிமுக அரசு உள்‌ நோக்கத்துடன்‌ வைத்திருப்பது ஏன்‌?

இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது; உடனடியாக ரத்து செய்க: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது; உடனடியாக ரத்து செய்க: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என்றும், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்களில் சிக்கித் தவிப்பவர்கள், பணி நிமித்தமாக சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள், சொந்த ஊர்களுக்குச் சென்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், முறைசாரா தொழிலாளர்கள், தினக்கூலிகள் என பலர் வேலை செய்து வந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

மேலும், இந்த இ-பாஸ் நடைமுறை சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், சராசரி ஏழை மனிதர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதாகவும் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனால் தமிழக அரசு இந்த இ-பாஸ் நடைமுறையை கைவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை உடனே ரத்து செய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, இ-பாஸ்‌ முறையை நீட்டித்து மக்களை துன்புறுத்தி வருவது அடுக்கடுக்கான எதிர்‌ விளைவுகளை ஏற்படுத்துகிறது.

மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கால்  ஏறக்குறைய ஐந்தாவது மாதமாக, ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு, தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட போக முடியாமல், மக்கள் அலைக்கழிக்கப்பட்டு அல்லல்களுக்குள்ளாக்கப் படுகிறார்கள்.

திருமணம்‌, மருத்துவ சிகிச்சை, இறப்பு உள்ளிட்ட அவசரத்தேவைகளுக்கு விண்ணப்பிக்கும்‌ இ-பாஸ்‌ கூட பல முறை நிராகரிக்கப்படுகிறது.

தமிழகம்‌ முழுக்கவும்‌ இ-பாஸ்‌ வழங்குவதில்‌ தாராளமாக ஊழல்‌ அரங்கேறி வருகிறது. ஊழல்களுக்கும்‌, முறைகேடுகளுக்கும்‌ வித்திடும்‌- வெளிப்படைத்தன்மை இல்லாத இ-பாஸ்‌ நடைமுறை ஊரடங்கில்‌ யாருக்குப்‌ பயன்படுகிறது?

அமைச்சர்களும்‌, முதலமைச்சரும்‌ போனால்‌ போதும்‌- வயிற்றுப்‌ பிழைப்பு தேடுவோர்‌, இறுதிச்‌ சடங்கில்‌ பங்கேற்போர்‌ கூட போக வேண்டியதில்லை என்ற முரட்டு மனநிலை அரசுக்கு அழகல்ல!

மத்திய அரசே இ-பாஸ்‌ நடைமுறை கட்டாயம்‌ இல்லை என்று அறிவித்த பிறகு - அதிமுக அரசு உள்‌ நோக்கத்துடன்‌ வைத்திருப்பது ஏன்‌? மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்படுகிறோம் என்று கூறும் முதல்வர் இ-பாஸ் நடைமுறையில் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை? 

ஊரடங்குத் தளர்வுகள் கொடுத்து, 'வேலைக்குப் போகலாம், கம்பெனிகள் திறக்கலாம்' என்று ஒருபுறம் அறிவித்துள்ள நிலையில் - இன்னொரு புறம் அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கும் விதத்தில்,  அவரவர் சொந்தப் பொறுப்பில் கூட, 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம்' என்று அறிவித்திருப்பது முதல்வரின் என்ன வகை கொரோனா நிர்வாகம்?

இந்தக் கேள்வியை நான் மட்டும் கேட்கவில்லை; இன்றைக்கு தமிழக மக்கள் அனைவரும் ஒருமுகமாகக் கேட்கிறார்கள்.

இ-பாஸ்‌ நடைமுறை முற்றாக தோல்வியடைந்துவிட்டது. செயற்கையான தடையை ஏற்படுத்தி ஊழல்‌ முறைகேடுகளுக்குக்‌ கதவைத்‌ திறந்து வைத்து மக்களை இன்னல்படுத்திட வேண்டாம்‌. இ-பாஸ்‌ நடைமுறை இனியும்‌ தேவையற்றது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.