This Article is From May 16, 2019

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

முன்னதாக கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது 'கோபேக் அமித்ஷா' என கல்லூரி மாணவர்கள் சிலர் பதாகை எந்தி நின்றதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்புக்கு அவர்களே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், கொல்கத்தாவில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளில் பிரசாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம், ஆளும் கட்சிகளுக்கு ஒரு விதிமுறையும் எதிர்க்கட்சிக்கு மற்றொரு விதியையும் கடைப்பிடிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.

சிலையை உடைப்பதையே பாஜக வழக்கமாக கொண்டுள்ளது. தமிழகத்தில் பெரியார் சிலையை உடைத்தது போன்று மேற்கு வங்கத்தில் வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

.