This Article is From Feb 11, 2020

வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது: ஸ்டாலின்

வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. நாட்டு நலனுக்காக கூட்டாட்சி உரிமைகளையும் பிராந்திய நலனையும் வலுப்படுத்த வேண்டும்

வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது: ஸ்டாலின்

வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதையே டெல்லி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. இதில், பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டி நடைபெறும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்கம் முதலே ஆம் ஆத்மி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 7 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 

ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் அனைத்து ஊடகங்களும் கூறியிருந்த நிலையில், தேர்தல் முடிவுகளிலும் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 


இதுகுறித்து தனது ட்வீட்டர் பதிவில் அவர் கூறியதாவது, ‘அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் என் வாழ்த்துகள். 

வகுப்புவாத அரசியலை வளர்ச்சி வெல்லும் என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. நாட்டு நலனுக்காக கூட்டாட்சி உரிமைகளையும் பிராந்திய நலனையும் வலுப்படுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

.