நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கைகள் நிறைவு பெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் கடும் தோல்வியை சந்தித்தது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகாவின் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியில் திமுகவின் சொந்த சின்னமான உதய சூரியன் சின்னத்தில் 23 தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது,
தமிழகத்தில் பாஜக நிச்சயம் தன்னை வலுப்படுத்தி நிலைநிறுத்தும், மத்திய அரசு தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டுவருவதற்கு உதவி செய்வார்கள். தமிழக பாஜகவும் தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளும்.
அதேபோல், தூத்துக்குடியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்வதற்கான முழு முயற்சியையும் நான் செய்வேன். எங்களது மக்கள் பணி என்றுமே தொடரும், தமிழகத்தில் ஒரு தற்காலிக பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
ஏனென்றால், இன்றைய சூழலில் நிச்சயம் வருங்காலம் எங்களுடையது அது மக்களுக்கானது என்பதை நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் கூறினார்.