P Chidambaram - "சிறையில் மரப் பலகையில் படுத்தது எனது கழுத்து மற்றும் பின் புறத்தை வலுவாக்கியுள்ளது. எனது மனமும் தெளிவு பெற்றுளது"
New Delhi: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி, 106 நாட்கள் திகார் சிறையில் அடைபட்டிருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram), நேற்று பிணை கொடுத்தது உச்ச நீதிமன்றம். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் முதலில் செய்த சில விஷயங்கள் பற்றி தற்போது தகவல் வந்துள்ளது.
தனக்காக நீதிமன்றத்தில் வாதாடிய மூத்த வழக்கறிஞர்களும் காங்கிரஸ் சகாக்களுமான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோருக்குத்தான் சிதம்பரம், விடுதலை பெற்ற உடன் போன் மூலம் பேசினாராம். இருவரையும் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவிக்கவும் சிதம்பரம் விருப்பப்படுகிறாராம்.
சிறையிலிருந்து வெளியே வந்த ஒரே நாளில் நாடாளுமன்றத்துக்கு வந்தார் சிதம்பரம். அவர் செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். தனக்கு நெருக்கமான கட்சி சகாக்களிடம் சிதம்பரம், திகார் சிறை மிகவும் குளிராக இருந்ததாகவும், சக கைதிகளுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியதாகவும் கூறினார்.
திகாரில் முதலில் அவருக்கு சிறை உணவுதான் அளிக்கப்பட்டது. அதனால் உடல் நலிவுக்கு ஆளானதால், நீதிமன்றம் அவருக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்க அனுமதி கொடுத்தது. அதன் பிறகு அவருக்கு, சற்று உடல் நலம் தேறியுள்ளது. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் பிணை தொடர்பாக நீதிமன்றத்தில் வாதாடும் போதும், அவரது உடல் எடை தொடர்ந்து குறைந்து வருவதை குறிப்பிட்டனர்.
“கடந்த 106 நாட்களில் எனது உடலும் மனமும் மேலும் சக்தியடைந்துள்ளன. சிறையில் மரப் பலகையில் படுத்தது எனது கழுத்து மற்றும் பின் புறத்தை வலுவாக்கியுள்ளது. எனது மனமும் தெளிவு பெற்றுளது. எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருந்தது. எப்படியும் நீதிமன்றம் எனக்கு நீதியை வழங்கும் என்று நம்பினேன்.
ஒரு அமைச்சராக நான் மிகவும் சரியாக நடந்து கொண்டேன். என்னுடன் வேலை செய்தவர்கள், என்னுடன் தொடர்பில் இருந்த தொழில் துறையைச் சேர்ந்தவர்கள், என்னை உற்று நோக்கிய பத்திரிகையாளர்களுக்கு அது தெரியும்,” என்று இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் சிதம்பரம்.
சிதம்பரத்தின் பிணை மனுவை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 28-ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சிதம்பரத்துக்குப் பிணை கொடுக்க மறுத்துவிட்டது.
பிணை விசாரணையின்போது அமலாக்கத் துறை, “கஸ்டடியில் இருக்கும் போதும் சிதம்பரத்தால் வழக்கின் முக்கிய சாட்சியங்களிடம் தாக்கம் ஏற்படுத்த முடியும்,” என்று குற்றம் சாட்டியது. அதற்குச் சிதம்பரம், “ஆதராமற்ற வாதங்கள் மூலம் சமூகத்தில் எனக்கிருக்கும் நன்மதிப்பையும் பொது வாழ்க்கையையும் சிதைத்துவிட முடியாது,” என்றார்.
இறுதியாக அமலாக்கத் துறையின் வாதங்களை ஏற்காத உச்ச நீதிமன்றம், சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்து உத்தரவிட்டது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது.