பீமா கொரேகான் கலவரம் (Bhima Koregaon Violence): செயற்பாட்டளர்களுக்கு மேலும் 4 வாரத்துக்கு காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம் (Supreme Court)
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி புனே காவல் துறை, 5 பிரபலமான செயற்பாட்டளர்களை சில வாரங்களுக்கு முன்னர் கைது செய்தது. இது தொடர்பான வழக்கில், செயற்பாட்டாளர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தொடர்ந்து அதை 4 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் ஃபெரேரா, கவுதம் நவால்கா, வெர்னன் கோன்சால்வேஸ் ஆகியோர் தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.
1818இல் மராத்தா பேஷ்வாக்களுடன் நடந்த போரில் வென்றதன் 200வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் இருந்து தலித் மக்கள் பீமா கோரேகானில் கடந்த டிசம்பர் 31 அன்று கூடினர். ஜனவரி ஒன்றாம் தேதி தலித் செயற்பாட்டாளர்களுக்கும் மராட்டிய சாதி இந்துக்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலர் காயமடைந்தனர், ஒருவர் உயிரிழந்தார். இந்த கலவரத்துக்கு காரணமானவர்கள் என்று கூறி, ஜூன் மாதம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதையொட்டித்தான் செயற்பாட்டளர்களும் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
செயற்பாட்டாளர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் மூலம், கைது வாரன்ட் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும். மேலும் கைதிகள் பிணையில் வெளியே வர முடியாது. போலீஸ் தரப்பும் 90 நாட்களுக்கு பதிலாக 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.
செயற்பாட்டாளர்கள், சிறப்பு புலனாய்வு குழு, வழக்கை விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டது. அவர்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.