This Article is From Dec 15, 2018

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு: அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்பதே அரசின் நிலைப்பாடு: அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்துள்ளது.

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு பின்னர் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது சுற்றுச்சுழலை பாதுகாக்க வேண்டும் ஆனால், இது சுற்றுச்சுழலுக்கு எதிராக இருப்பது போல் தெரிகிறது.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறசூழல் பாதிப்பு, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது அனைத்தையும் மாநில அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. பொதுமக்களின் கருத்தும் அது தான்.

அதனால், தற்போது முதல்வர் சொன்னது போல் மேல்முறையீடு செல்வோம். ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஏற்கனவே எடுத்த நிலை தான், அதாவது, இந்த ஆலை எக்காரணம் கொண்டும் திறக்கக்கூடாது. மூடப்பட்டது மூடப்பட்டது தான் அது மூடி தான் இருக்க வேண்டும் அது தான் எங்கள் நிலை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

.