சிபிஐ அமைப்பு, இந்த வழக்கு தொடர்பாக சந்தா கோச்சருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
New Delhi: கடன் வழங்கிய வழக்கில் சிக்கியுள்ள ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சி.இ.ஓ சந்தா கோச்சார் (Chanda Kochhar) மற்றும் வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூட் ஆகியோரது அலுவலகம் மற்றும் இல்லங்களில் இன்று அதிரடி சோதனை செய்துள்ளது அமலாக்கத் துறை.
சிபிஐ அமைப்பு, இந்த வழக்கு தொடர்பாக சந்தா கோச்சருக்கு லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. வேணுகோபாலுக்கு, லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்ப சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
விசாரணை அமைப்புகளிடமிருந்து தப்பித்து குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்காக, விமான நிலையங்களுக்கு அனுப்படுவதுதான் லுக்-அவுட் நோட்டீஸ்.
ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சார் இருந்தபோது, வீடியோகான் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட கடன் குறித்துதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ, வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய கொஞ்ச நாட்களில், கோச்சாரின் கணவர் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தது. இதுதான் தற்போது விசாரணை நடந்து வருவதற்குக் காரணம்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சந்தா கோச்சார், 'நான் ஐசிஐசிஐ வங்கியில் 34 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். நிறுவனத்தின் நலனுக்காக மிகவும் கடுமையாக உழைத்தேன். நிறுவனத்தின் நலன் கருதி மட்டுமே நான் பதவியிலிருந்த போது உழைத்தேன்' என்று விளக்கம் கொடுத்துள்ளார்.