கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம், ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.
கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும் என அறிவித்துள்ளது. ரன்வேயில் தண்ணீர் சூழ்ந்ததை தொடர்ந்து கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் மற்ற சேவைகளும் பாதிப்பு அடைந்துள்ளன.
இந்நிலையில், வயநாடு தொகுதி எம்.பியான ராகுல் காந்தி, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர கோரி பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
முன்னதாக, தனது ட்வீட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறியதாவது, எனது வயநாட்டு தொகுதியில் வெள்ள சூழ்நிலை மோசமாக உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மீட்பு பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து கேரள முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். பிரதமரை தொடர்பு கொண்டு சூழ்நிலையை விளக்கி, மத்திய அரசின் உதவியை கேட்பேன் எனக்கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தர கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.