2019 மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயராகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. அதேபோல தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி நடத்தி முடிக்க தேர்தல் ஆணையமும் வேலைகளை செய்து வருகிறது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக நடுவே கூட்டணி உறுதியாகிவிட்டது. அதேபோல், அதிமுக தரப்பில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் பாஜகவுடன் தான் கூட்டணி என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் செய்தியார்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது,
திராவிட கட்சிகளை தமிழகத்தில் வளரவிட மாட்டோம் என்று கூறும் பாஜகவை தமிழகத்தில் எப்படி வர விடுவோம்? அப்போது தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என்று தமிழிசை செளந்தரராஜன் கூறுவதை சுட்டி காட்டிய அவர், அப்படியென்றால், நாங்கள் மட்டும் தேசிய கட்சிகள் என்று கூறிக்கொள்பவர்களை சுமந்து செல்ல வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வருமான வரி சோதனை நடத்தி தங்களை மத்திய அரசு பழிவங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவில் இப்போது தேசிய கட்சிகளே இல்லை என்றும் அனைத்துமே மாநில கட்சிகள் தான்.
எங்கள் இயக்கத்தை யார் மதிக்கிறார்களோ, தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதை முதலமைச்சர் தெளிவாக கூறியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.