ஹைலைட்ஸ்
- இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஸ்பெயினில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடும்
- இதுவரை 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன
இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் ஸ்பெயின் வெற்றி பெற்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டியில் இந்தியா வெற்றி கண்டது.
ஸ்பெயினில் இருக்கும் கான்சிஜோ சுப்பீரியர் டி டிபோர்டெஸ் மைதானத்தில் இந்த மூன்றாவது போட்டி நடந்தது. தொடரை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்தியா களமிறங்கியது. அதே நேரத்தில், இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஸ்பெயின் அணி விளையாட எத்தனித்தது.
போட்டியின் தொடக்கம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் மரியா லோபஸ், போட்டியின் 3 வது நிமிடத்திலேயே ஒரு கோல் போட்டார். ஆனால், இந்திய அணி, அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டன. இதனால், தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
அப்போது தான் திருப்பம் காத்திருந்தது. ஸ்பெயினின் லோலா ரீரா, 58 வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் சமமானது. ஆனால், அடுத்த நிமிடமே இந்திய கேப்டன் ராணி, ஒரு அட்டகாசமாக கோல் அடித்தார். இந்த கணக்கு ஆட்ட நேரம் முடியும் வரை மாறவில்லை. இதனால், ஸ்பெயினை இந்தியா, 3 - 2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இன்று ஸ்பெயினுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நான்காவது போட்டி நடக்க உள்ளது. மகளிருக்கான உலக ஹாக்கி தர வரிசைப் பட்டியலில் ஸ்பெயின், 11 வது இடத்தில் இருக்கிறது. இந்தியா, 10 வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.