This Article is From May 06, 2019

கணினி, ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு - இவைகளால் ஏன் இந்த வேலைகளை செய்ய முடியாது?

வேலைகளில் கணினியின் பயன்பாடு என்பது வேலையின் வேகத்தை கூட்டி, மனிதர்களால் ஏற்படும் பிழைகளை குறைக்கிறது.

கணினி, ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு - இவைகளால் ஏன் இந்த வேலைகளை செய்ய முடியாது?

அனைத்துத் துறைகளும் கணினி மயம் ஆகிறதா?

கணினி, ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு- இவை அனைத்தும் வருங்காலத்தில் சில செயல்களுக்கு மனிதர்களின் தேவையே இருக்காது என்ற நிலையை வெகு விரைவில் உண்டாக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம், நாளுக்கு நாள் வெளிவரும் புதுப்புது கண்டுபிடிப்புகள் இதற்கு சாட்சி. இன்னும் கூறப்போனால், கடந்த 2017 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள மெக்கென்சி குளோபல் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஒரு ஆய்வின் முடிவு 2030க்குள் 80கோடிக்கும் மேலான வேலைகள் மனிதர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு இயந்திரங்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் எனக் கூறுகிறது. தற்போதே, சில இடங்களில் பணம் பெற, தொலைபேசி வழி விளம்பரங்கள், சில விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்கள் என கண்னி மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, நம் அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வேலைகளில் கணினியின் பயன்பாடு என்பது வேலையின் வேகத்தைக் கூட்டி, மனிதர்களால் ஏற்படும் பிழைகளை குறைக்கிறது. இதனாலேயே, பல இடங்களில் மனிதர்களின் இடத்தில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மொத்த உலகையும் கணினி மயமாக மாற்றுவதில் இருந்து எது நம்மை தடுக்கிறது. கணினியால் செய்ய முடியாத அப்படியான வேலைகள் என்னென்ன?

எந்த வேலைகளில் எல்லாம் மனிதர்கள் சிந்தனை வடிவங்கள் தேவைப்படுகின்றனவோ, சிக்கல்களை தீர்க்கும் மூளை தேவைப்படுகிறதோ, ஒரு தனிமனிதனுடைய தனித்தன்மை எந்த வேலைகளில் எல்லாம் தேவைப்படுகிறதோ, கட்டாயம் அந்த வேலைகளையெல்லாம் இயந்திரங்களால் செய்ய முடியாது.

எந்த வேலைகளில் எல்லாம், இரக்க குணம், பொறுமை, உள்ளுணர்வு, உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய திறன்கள் தேவைப்படுகிறதோ, அந்த வேலைகள் எல்லாம் இயந்திரங்களுக்கு ஏற்ற வேலைகளாக இருக்காது. அந்த வகையில் பார்க்க போனால், பராமரிப்பாளர்கள், மருத்துவத்துறையில் இருப்பவர்கள், செவிலியர்கள், இன்னும் சொல்லப்போனால் விற்பனையாளர்கள் என இந்த சமூகத்தைச் சார்ந்தவர்களை இயந்திரங்களால் மாற்றியமைக்க இயலாது.

ஒரு பேரம் பேச வேண்டும் என்றாலோ, ஒரு சிக்கலான முடிவு எடுக்க வேண்டும் என்றாலோ, இம்மாதிரியான மனிதர்களை சார்ந்த செயல்கள், மனித மூளை, ஒரு தனிமனிதனின் திறன் ஆகியனவற்றை முன்வைத்து செயல்படுத்தப்படும் எந்த ஒரு வேலையையும் நிச்சயமாக இயந்திரங்கள் செய்ய முடியாது. திட்டமிடுதல், வியூகம் வகுத்தல் ஆகியவற்றில் எப்போதுமே இயந்திரங்கள் பிந்தங்கியே இருக்கும். எனவே அரசியல், தொழில் வணிகம், ஆலோசனைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் எப்போதுமே கணினியின் கைகள் நுழைய முடியாது.

ஒருவேளை உங்கள் நாட்டுப் பிரதமர் தேர்தலில் ஒரு ரோபோ போட்டியிட்டால் நீங்கள் வாக்களிப்பீர்களா? உங்கள் முன் அமர்ந்து செய்தி வாசிப்பது ஒரு ரோபோவாக இருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு பதில் வாதாடுவது ஒரு ரோபோவாக இருந்தால்? அல்லது தீர்ப்பு வழங்கும் நீதிபதி ஒரு ரோபோ என்றால், வழக்கு என்ன ஆவது, தீர்ப்பு என்ன ஆவது?

ஓரு வியபார ஒப்பந்தம். வடிக்கையாளரிடம் பேசி ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும். ஒரு ரோபோவால் அதை செய்து முடித்திட முடியுமா? அல்லது ரோபோக்களால் பிரச்னைகளை ஆராய்ந்து முடிவு எடுக்க முடியுமா? ஒரு தொழில் உள்ளது என்றால், அந்த தொழிலின் வருங்காலத்தை ஆராய்ந்து அதனை மேம்படுத்த முடியுமா?

விளையாட்டுத்துறையில் மனிதர்களுக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்த முடியுமா? அப்படி பயன்படுத்தினால் அது போட்டியாக இருக்குமா? அந்தப் போட்டியை யாராவது பார்ப்பார்களா?

கலை, ஓவியம், நடிப்பு, இயக்கம், இசை, ஒளிப்பதிவு இதையெல்லாம் எந்த இயந்திரத்தினால் செய்ய முடியும்?

இவை அனைத்தும்தான் உலகம் முழுக்க இயந்திரமயமாக மாறுவதை தடுத்து வைத்திருக்கிறது. இயந்திரங்களால் பல செயல்களில் மனிதர்களை விட சிறப்பாக செயல்பட முடியும். ஆனால், அவைகளால் செய்ய முடியாத செயல்களும் பல இருக்கின்றன.

Click for more trending news


.