Thiruvananthapuram: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மசூதி, வெள்ளத்தின் போது பல இந்து குடும்பங்களுக்கு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேல் மசூதியில் பலர் தஞ்சமடைந்தனர். இதில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும், அவர்களுக்கு முஸ்லீம்கள் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து தந்துள்ளனர் என்பதும் பலரை நெகிழ வைத்துள்ளது.
சாலியர் கிராமத்தில் உள்ள அகம்படத்தில் இருக்கிறது ஜுமா மசூதி. கடந்த 8 ஆம் தேதி முதல் பெய்து வந்த பெரு மழையை அடுத்து, இந்த மசூதி நிவாரண முகாமகவே மாறியது.
ஏறத்தாழ 17 இந்து குடும்பங்கள், அவர்களின் வீட்டில் வெள்ள நீர் சூழ்நததை அடுத்து, மசூதிக்கு வந்து தங்கினர். அவர்களுக்கு உண்ண, உறங்க மற்றும் பிற அடிப்படை தேவைகளை அங்கிருந்த முஸ்லீம்கள் செய்து தந்துள்ளனர்.
இது குறித்து சாலியர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் உஸ்மான் கூறுகையில், ‘மசூதியில் தங்கியிருந்த 78 பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். நாங்கள் 8 ஆம் தேதியே மசூதியில் மக்கள் வந்து தங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தாலும், 14 ஆம் தேதி தான் அதிக அளவிலானவர்கள் வந்தனர். அப்போது தான் நிலச்சரிவு சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்தன. சிலர் வெள்ள நீர் வடியத் தொடங்கியதை அடுத்து, அவர்களின் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் பலர் பக்ரீத் பண்டிகையை எங்களுடன் கொண்டாடி விட்டுச் சென்றனர்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் இருக்கும் வென்னியோடு விஷ்ணு கோயிலையும், மலப்புரம் மன்னார்காட்டில் உள்ள ஐயப்பன் கோயிலையும் இரண்டு முஸ்லீம் குழுக்கள் சுத்தம் செய்துள்ளனர். முஸ்லீம்கள் கோயிலை சுத்தம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.