Thiruvananthapuram, Kerala: திருவணந்தபுரம்: பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை மனிதனே சுத்தம் செய்யும் அவலம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே வருகிறது, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட ஆளிறங்கும் குழாய்கள் உள்ளன.
சமீபத்தில், கேரளாவில் வடிவமைக்கப்பட்ட ‘பேண்டிகூட்’ என்ற ரோபோ, பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவணந்தபுரத்தை சேர்ந்த பொறியாளர்கள் இணைந்து ஜென்ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்-அப் நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். இந்த குழுவை சேர்ந்த பொறியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்கும் ‘ரோபோ’ எந்திரத்தை உருவாக்கியுள்ளனர்
தமிழகத்திலேயே முதல் முறையாக கும்பகோணம் நகராட்சியில், பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்தும் பணிக்காக, ‘பேண்டிகூட்’ ரோபோவை பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து இந்த ரோபோவை கும்பகோணம் நகராட்சி பெற்றுள்ளது
நகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் , மாவட்ட உதவி ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோரின் முன்னிலையில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோவை பயன்படுத்துவதன் மூலம், பாதாள சாக்கடை பணிகளை சுத்தம் செய்ய ஆளிறங்கும் குழாய்களில் மனிதர்கள் இறங்கி பணியாற்ற தேவையில்லை. இதன் மூலம், கழிவு நீர் சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியும் என்று ஜென்ரோபோடிக்ஸ் முதன்மை இயக்குனர் விமல் கோவிந் தெரிவித்துள்ளார்
தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவில், வைஃபை, ப்ளூடூத் இணைப்பு, கட்டுப்பாட்டு வசதிகள், பக்கெட் சிஸ்டம், வசதிகள் கொண்டுள்ளது. மேலும், தரைக்கு மேலே இருந்து மானிட்டர் மூலம் கண்காணித்து பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய முடியும்.