This Article is From Feb 14, 2020

பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்

வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

Advertisement
தமிழ்நாடு Edited by

2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும் - விஜயகாந்த்

2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதிய செலவுக்காக இந்த நிதியாண்டில் ரூ.64,208.55 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கூவம் மற்றும் அடையாறு நதிகளை சீரமைக்க ரூ.5,439 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக தேமுதிக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, "2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைக்கு பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.

முக்கியமாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூபாய் 15 ஆயிரத்து 850 கோடி, சாலை மேம்பாட்டுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 667 கோடி, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி, கிராம ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 23 ஆயிரத்து 161 கோடி, விவசாயத்திற்காக ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி, சுற்றுவட்ட சாலைக்கு ரூபாய் 12 ஆயிரம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதேபோல, மகளிர் மேம்பாட்டுக்கு ரூபாய் 78 ஆயிரத்து 796 கோடியில், குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பானதாகும். முதியோருக்காக 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்க ரூபாய் 476 கோடியும், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்புத் திட்டங்களும் மற்றும் முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதில் மகளிருக்காக இந்த அரசாங்கம் மிக முக்கியப் பங்கு அளித்துள்ளது. இது நாம் அனைவரும் வரவேற்கக்கூடியதாகும்.

Advertisement

கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் மிக மோசமான நிலையை அடைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டை நம்பி வாழ்ந்த பல பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில், இன்றைக்கு முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது பல பேருக்கு வேலைவாய்ப்பு அமைவதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.

அதேபோல் வேலைவாய்ப்புக்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.

Advertisement

எனவே 2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட்தான், இந்த அரசின் இறுதி பட்ஜெடாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement