மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு நாட்டின் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்
ஹைலைட்ஸ்
- ஸ்டாலின், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்
- பட்நாயக், கேசிஆர் இன்னும் இது குறித்து வாய் திறக்கவில்லை
- சென்ற மாதம் அனைத்து எதிர்கட்சிகளையும் இணைத்து மாநாடு நடத்தினார் மம்தா
New Delhi: மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நேற்று விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது செய்தனர். சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு சிபிஐ அதிகாரிகளை மேற்கு வங்க போலீஸார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு தரப்பு, மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் நடந்தன.
மம்தாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு நாட்டின் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தேசிய கான்ஃபரன்ஸ் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் மம்தா-வை போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ட்விட்டர் மூலம் மம்தாவுக்குத் தங்களின் ஆதரவை தெரிவித்தனர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், இன்று கொல்கத்தாவுக்கு நேரில் சென்று மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
நேற்று முதல் தர்ணாவில் ஈடுபட்டு வரும் மம்தா, “சட்ட சாசனத்தை அழிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. எனது தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அதிகாரிகளை காக்க வேண்டியது எனது கடமை. எங்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது. அதன் காரணமாகவே அவர்கள் சிபிஐ அமைப்பை ஏவி விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.
சென்ற மாதம் இந்தியாவின் பிரதான எதிர்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து, கொல்கத்தாவில் மாநாடு நடத்தினேன். அதைப் பொறுக்க முடியாமல் தான் பாஜக இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளது. எங்களை ஒடுக்குவதற்கு அமித்ஷாவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.