This Article is From Jun 20, 2020

கொரோனா தொற்று எப்போது ஒழியும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்: முதல்வர் எடப்பாடி

கொரோனாவுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் கூட, மருத்துவர்களின் சிகிச்சையால் 54% பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை.

கொரோனா தொற்று எப்போது ஒழியும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்: முதல்வர் எடப்பாடி

கொரோனா தொற்று எப்போது ஒழியும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்: முதல்வர் எடப்பாடி

ஹைலைட்ஸ்

  • கொரோனா தொற்று எப்போது ஒழியும் என்று ஆண்டவனுக்கு தான் தெரியும்
  • கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • அரசுக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்

கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சைக்காக சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் ஒரு புதிய நோய். ஆரம்பத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களிடத்தில்தான் இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவப் பணியாளர்களின் முயற்சியால் இன்று குணமடைந்தவர்களின் சதவீதம் 54 சதவீதமாக உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல. யாரையும் சோதனைக்கு உள்ளாக்குவதற்கு அல்ல. அதனால், அரசுக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மேலும், பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகளவில் உள்ளன. கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 45 அரசு மற்றும் 38 தனியார் மையங்கள் என மொத்தம் 83 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் மருத்துமனைகளில் 5,000 படுக்கைகள், கல்லூரிகள், பள்ளிகளில் 12,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். எனக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியுமா? நாம் மருத்துவர்கள் கிடையாது. படிப்படியாகத்தான் ஒழிக்க முடியும் என்கின்றனர். 

பொதுமக்கள் எப்போது வீட்டை விட்டு வெளியே சென்றாலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனாவுக்க மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் கூட, மருத்துவர்களின் சிகிச்சையால் 54% பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ நிபுணர்கள், ஆட்சியர்களுடன் பல முறை ஆலோசனை நடத்தப்பட்டது. தனக்கு கொரோனா தொற்று இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறிவிட்டார் என்று எடப்பாடி தெரிவித்தார்.

.