பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு நேற்றைய தினம் அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளாக பொள்ளாச்சியில் உள்ள ஒரு சில கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. 200க்கும் மேலான பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அந்த கும்பலின் கைபேசியில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுவரை பாதிக்கப்பட்ட எந்த பெண்களும் புகார் தெரிவிக்க முன்வராததால் கும்பலின் அட்டூழியம் நீடித்து வந்துள்ளது.
இப்படி இருக்கும்போது, கடந்த பிப்.25ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரிலை இந்த விவகாரம் தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாலியல் குற்றச்சாட்டுகளில் உள்ளான போது பாதிக்கப்பட்டவருடைய விவரங்கள் என்பது வெளிவர கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்த உச்சநீதிமன்ற அறிவிப்பையும் தாண்டி காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் முழு விவரங்களையும் ஏற்கனவே வெளியிட்டது. இதற்கு கடும் கண்டனங்களும் எழுந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணையிலிருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம்பெற்றிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி, அவரது சகோதரர் பெயர் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த செயல் என்பது கூட இனிமேல் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருபோதும் வெளியில் வந்து தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்ல கூடாது என்பதனை மறைமுகமாக சொல்வது போல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு!
இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா? குற்றவாளிகளை காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.