2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, தனிப் பெரும்பான்மைப் பெற்றது.
ஹைலைட்ஸ்
- ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல்
- ஜனநாயகத்தின் பண்டிகை தேர்தல்: மோடி ட்வீட்
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன
New Delhi: 17வது லோக்சபா தேர்தல் (Lok Sabha elections) 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும். 7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும். அனைத்து கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்.
ஏப்ரல் 19, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12 மற்றும் மே 19 தேதிகளில் 2 முதல் 7 ஆம் கட்ட தேர்தல்கள் நடக்கும் (Election dates 2019). ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் (39 தொகுதிகள்) மற்றும் புதுச்சேரியில் (1 தொகுதி) லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது.
ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில், சட்டமன்றத் தேர்தலும் லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘ஜனநாயகத்தின் பண்டிகையான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் இந்தியர்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு சதவிகிதம் பதிவாகும் என நான் நம்புகிறேன். முதல் முறை வாக்கு செலுத்துவோர்க்கு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன்' ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, லோக்சபா தேர்தல் மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் குறித்து தற்போதைக்கு எந்த அறிவிப்பும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஜம்மூ காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன், 3 ஆம் தேதியுடன், தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, தனிப் பெரும்பான்மைப் பெற்றது. மொத்தம் இருக்கும் 543 தொகுதிகளில் பாஜக, 282 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 336 இடங்களை கைப்பற்றியது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரஸுக்கு வெறும் 44 இடங்கள் மட்டுமே கிடைத்தன.