மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது: முதல்வர் எடப்பாடி
சென்னையில் தொற்று அதிகமான நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கை மேலும் கடுமையாக்கப்படும் என்கிற செய்தி தவறான செய்தி. அவ்வாறு என் பெயரில் வெளிவந்த செய்தி தவறானது. அப்படித் தகவல் வெளியிட்டவர்கள், பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி. 87 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். குறுகலான பகுதி. இதனால்தான் தொற்று எளிதாகப் பரவும். இதற்காக ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுப் பணிகள் நடக்கின்றன. இதைக் கண்காணிக்க 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்கள் கண்காணிக்கிறார்கள்.
இது ஒரு புது நோய். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு அறிவிக்கும் வழிமுறைகளைக் கட்டாயம் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதனால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளிலேயே உயிரிழப்பும், நோய்த்தொற்றும் அதிகம் இருக்கிறது. சாதாரண மக்கள் வாழும் தமிழகத்தில் கட்டுப்பாடுடன் வைத்திருக்கிறோம்.
ஊடகத்தின் வாயிலாக தினந்தோறும் விழிப்புணர்வு , வழிகாட்டுதல்களைத் தெரிவித்து வருகிறோம். ஆனால், மக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். நான் வரும்போது பலரையும் பார்க்கிறேன். யாருமே முகக்கவசம் அணியவில்லை.
விழிப்புணர்வுப் படம் எடுத்து வெளியிட்டோம். அதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் அதைக் கடைப்பிடிக்க மறுக்கிறார்கள். பொதுமக்களுக்குக் குறிப்பாக சென்னை மக்களுக்குக் கோரிக்கை வைக்கிறோம். அரசு அறிவிக்கின்ற நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்.
எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன. நோய் யாருக்கும் வரும் என்றே தெரியவில்லை. அனைவருக்கும் வந்துள்ளது. பிரிட்டன் பிரதமருக்கே வந்தது. நமது சட்டப்பேரவை உறுப்பினரே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிதான ஒரு நோய். ஆகவே, பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அரசும் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.