This Article is From Mar 20, 2019

நாட்டிற்கு வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும்தான்: எடப்பாடி பேச்சு

நாட்டிற்கு வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும்தான் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நாட்டிற்கு வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும்தான்: எடப்பாடி பேச்சு

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. இதில், படிப்படியாக கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து, தொகுதி வேட்பாளர்கள் பெயரையும் அதிமுக அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து, இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த துவங்கியுள்ளனர். அந்த வகையில், சேலத்தில் அதிமுக வேட்பாளர் சரவணனை அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, மேடையில் பேசிய அவர்,

மக்கள் நலனை முதன்மையான கொண்டு நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம். மத்தியில் ஒரு ஆட்சி மாநிலத்தில் ஒரு ஆட்சி என்று இருந்தால் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாது. அப்படி, மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 130 கோடி மக்களின் பாதுகாப்பு முக்கியம். அந்த பாதுகாப்பு வலிமையை கொடுக்க கூடிய ஒரே கட்சி பாஜக மட்டும்தான். வலிமையான தலைமையின் கீழ் நாடு இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். நாடு பாதுகாப்பாக இருக்க மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில சுயநலவாதிகள் செய்த சதியினால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் கூறினார்.


 

.