பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஹைலைட்ஸ்
- பயணிகள் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு
- ரயில்வேயின் அறிவிப்பிற்கு ப.சிதம்பரம் வரவேற்பு
- மே 17 ஆம் தேதியுடன் நாட்டில் உள்ள ஊரடங்கு முடிவுக்கு வருகிறது
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் முழு முடக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்துப் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் வருகிற மே 17 ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முழு முடக்க நடவடிக்கையானது முடிவடையக்கூடிய நிலையில் மத்திய அரசு, கடந்த திங்கட்கிழமை பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.
தற்போது, பயணிகள் ரயில்கள் படிப்படியாக இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக புது டெல்லி ரயில் நிலையத்திலிருந்து மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பிற முக்கிய நகரங்களுக்கு 30 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாளை முதல் இந்த ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் ரயில் நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பயணத்திற்கான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணியளவில் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட்டுகள் இணைய வழியில், ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். அல்லது மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஆனால், முகவர்கள் மூலம் முன்பதிவு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், “மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.
பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம்,” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.