This Article is From Apr 30, 2020

“மாபெரும் தவறைத் திருத்த ஒரே வழிதான் உண்டு!”- மத்திய அரசுக்கு செக் வைக்கும் ப.சிதம்பரம்

"இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா"

“மாபெரும் தவறைத் திருத்த ஒரே வழிதான் உண்டு!”- மத்திய அரசுக்கு செக் வைக்கும் ப.சிதம்பரம்

ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும்.

ஹைலைட்ஸ்

  • வாராக் கடன் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சிதம்பரம்
  • முன்னதாக ராகுல் காந்தி வாராக் கடன் குறித்து ட்வீட்டியிருந்தார்
  • ராகுலுக்கு மறுப்பு தெரிவித்து நிர்மலா சீதாராமன் எதிர்வாதம் வைத்துள்ளார்

இந்திய வங்கிகளில் சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற முதல் 50 பேரின் பட்டியல் குறித்தான சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது. காங்கிரஸின் முக்கிய நிர்வாகியான ராகுல் காந்தி, இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதில், “நான் 50 வங்கி மோசடியாளர்கள் பெயர்களை தெரிவியுங்கள் என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் அதற்கு மத்திய நிதி அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தற்போது ஆர்பிஐ வெளியிட்ட அது குறித்தான பட்டியலில் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, மற்றும் பிற பாஜக நண்பர்கள் உள்ளனர். இதனால்தான் நாடாளுமன்றத்தில் உண்மையை மறைத்தனர்” என்று அவர் சாடியிருந்தார்.

ராகுலின் இந்த குற்றச்சாட்டை மறுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதற்கு எதிரான விளக்கமும் கொடுத்திருந்தார். அதைப் போலவே மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ராகுல் காந்தி, ப.சிதம்பரத்திடம் பாடம் கற்று ‘Write off'க்கும், ‘Waive off'க்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். ரைட் ஆஃப் என்பது சாதாரண கணக்கியல் நடவடிக்கை. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதால் செலுத்த வேண்டிய கடன் திருப்பி வாங்கப்படாமல் விடப்படும் என்று அர்த்தமில்லை,” என்று விமர்சித்திருந்தார். தற்போது 50 பேரின் கடனை மத்திய அரசு, ரைட் ஆஃப் மட்டுமே செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “ரூ 68,000 கோடி வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்.

இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா. இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு.

ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்' என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிட வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 
 

.