Read in English
This Article is From Dec 22, 2018

15 நாட்களாக மேகாலயாவின் சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 பேர்; திக் திக் மீட்புப் பணி தொடக்கம்!

மேகாலாயாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கடந்த 15 நாட்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்

Advertisement
இந்தியா ,

உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க, அரசு சார்பில் கடந்த 15 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

Guwahati:

மேகாலயாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த 15 நாட்களாக சிக்கியுள்ள 15 பேரைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். ‘எலிப் பொறி' போல் இருக்கும் அந்த சுரங்கத்திலிருந்து சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகப் பெரும் சவால் என்று மீட்புப் படை அதிகாரிகள் NDTV-யிடம் கருத்து கூறியுள்ளனர். 

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி, மேகாலயாவின் சாய்பங்கில் இருக்கும் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கம், இடிந்து விழுந்தது. இதையடுத்து, அருகிலிருந்து லிட்டியன் நதியிலிருந்து சுரங்கத்திற்குள் நீர் புகுந்தது. இதனால், சுரங்கத்திற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த 15 பேர், உள்ளேயே மாட்டிக் கொண்டனர். 

உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க, அரசு சார்பில் கடந்த 15 நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அதில் இதுவரை எந்தவித வெற்றியும் கிடைக்கவில்லை. 

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி சாஸ்திரி, “மீட்புப் படை வரலாற்றிலேயே இதைப் போன்ற ஒரு விஷயத்தை நாங்கள் சந்தித்தில்லை. சிக்கியுள்ளவர்களை மீட்பது மிகப் பெரிய சிரமமாக இருக்கும். 

Advertisement

எங்களுக்கு சுரங்கம் குறித்து முறையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. சுரங்கம் மிக ஆழமானதாக இருக்கிறது. நொடிக்கு நொடி, அதற்குள் நீர் அதிகரித்துக் கொண்டே போகிறது” என்றார். 

அவர் மேலும், “இதைப் போன்ற ‘எலிப் பொறி' சுரங்கங்களுக்கு முறையான வரைபடம் இருக்காது. ஆகவேதான், மீட்புப் பணியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்கிறோம். உள்ளே இருப்பவர்களை உயிருடனோ, இறந்த நிலையிலோ மீட்க நாங்கள் முழு முயற்சி மேற்கொள்வோம்” என்றார் முடிவாக.

Advertisement

கடந்த 2014 ஆம் ஆண்டே, மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களுக்குத் தடை விதித்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். பல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், ‘மேகாலயாவின் நிலத்தடி நீர் மாசுக்கு நிலக்கரி சுரங்கங்கள்தான் காரணம்' என்று புகார் தெரிவித்த பின்னர், தீர்ப்பாயம் தடை உத்தரவை பிறப்பித்தது. ஆனால், இன்றளவும் மேகாலயாவில் பல இடங்களில் சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டுத்தான் வருகின்றன.

 

Advertisement