செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது' என்றார்
New Delhi: நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலைநில், மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிராக 20-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இன்று டெல்லியில் சந்திரபாபு நாயுடு தலைமையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளன.
செய்தியாளர்கள் சந்திப்பில் சந்திரபாபு நாயுடு, ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எங்களுக்கு சந்தேகங்கள் உள்ளது. வாக்காளரின் நம்பிக்கை வாக்குச்சீட்டு முறை மூலமே நிலை நிறுத்தப்படும்.
ஜெர்மனி, நெதர்லாந்து, ஐயர்லாந்து போன்ற மிகவும் முன்னேறிய நாடுகளே, முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இந்திர வாக்கு முறையைப் பயன்படுத்தினர். ஆனால், இப்போது அவர்கள் வாக்குச்சீட்டு முறைக்கு மாறியுள்ளனர். அவர்கள் ஏன் அப்படி சென்றார்கள் என்பது குறித்தும் தெளிவாக கூறியுள்ளனர்' என்றார்.
கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. அது குறித்து பேசிய நாயுடு, ‘தேர்தல் மிகுந்த குழப்பத்துடனும், மிகுந்த சிக்கல்களுடனும் நடந்துள்ளது. 150 தொகுதிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். ஆந்திராவில் நடந்த தேர்தலில் 4,583 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை' என்றார். அவரின் இந்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து நாயுடு, தேர்தல் ஆணையம் மீதும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
தேர்தல் ஆணையம் பற்றி நாயுடு, ‘இதைப் போன்ற ஒரு பொறுப்பற்ற, உணர்வற்ற தேர்தல் ஆணையத்தை நான் பார்த்ததே இல்லை. ஜனநாயகத்தையே அவர்கள் கேலிப் பொருளாக மாற்றியுள்ளார்கள். தேர்தல் ஆணையம், பாஜக-வின் கிளை அலுவலகமாக மாறியுள்ளது' என்று கறாராக கருத்து கூறியுள்ளார்.