This Article is From Dec 11, 2018

எதிர்கட்சிகள் சந்திப்பு: ஒரே இடத்தில் ராகுல், ஸ்டாலின், கெஜ்ரிவால், மம்தா!

இன்று எதிர்கட்சிகளின் சந்திப்பு நடைபெற உள்ளது

Opposition Meet Today: பாஜக-வுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஹைலைட்ஸ்

  • இன்று டெல்லியில் நடக்கும் சந்திப்புக்கு சந்திரபாபுவே காரணம்
  • இன்றைய சந்திப்பில் மாயாவதி கலந்து கொள்ள வாய்ப்பில்லை
  • பாஜக-வுக்கு எதிராக ஒன்றிணைவதே இந்தச் சந்திப்பின் நோக்கம்
New Delhi:

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வர இன்னும் ஒரே நாள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்திய அளவில் உள்ள பிரதான எதிர்கட்சிகள் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரக்கின்றன.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுதான், எதிர்கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் வேலையைச் செய்துள்ளார். டெல்லியில் நடக்கும் இந்தச் சந்திப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

அதே நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்தச் சந்திப்பில் பங்கேற்கமாட்டார் என்றும் நமக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மாயாவதி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவர் மட்டும் காங்கிரஸுடன் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜும் காங்கிரஸும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இரு கட்சிகளுக்கும் தொகுதி உடன்பாடு ஏற்படாததால், கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக மாயாவதி, காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்ற போது, அவரது பதவியேற்பு விழாவில் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ‘மகா எதிர்கட்சிக் கூட்டணி'-க்கு இந்த நிகழ்ச்சிதான் தொடக்கப் புள்ளி என்று சொல்லப்பட்டது. பாஜக, உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் நடந்த இடைத் தேர்தல்களில் படுதோல்வியடைந்ததும், எதிர்கட்சிகளுக்கு உந்துதலாக இருந்துள்ளது. ஒடிசாவைப் பொறுத்தவரை, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக், பாஜக - காங்கிரஸ் சார்பு எடுக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்த மகா கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு, ‘காங்கிரஸுடன் தோழமையாக இருக்கும் ஒன்றிரண்டு கட்சிகளுக்கு, சில அதிருப்திகள் இருக்கின்றன. ஆனால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைவரும் முரண்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

நாயுடு தொடர்ச்சியாக, ராகுல் காந்தி, சரத் பவார், பரூக் அப்துல்லா, மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், தேஜாஷ்வி யாதவ், குமாரசாமி உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து, மகா கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், இன்று எதிர்கட்சிகளின் சந்திப்பு நடைபெற உள்ளது.

.