6 பேர் இருந்த விமானக் குழுவுக்கு, கேப்டன் சுனேஜா தான் தலைமை வகித்தார்
New Delhi: இந்தோனேசியா தலைநகரமான ஜகார்த்தாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மாயமானது. ஜாவா தீவுகளுக்குப் பக்கத்தில் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நம்பப்படுகிறது. விமானத்தில் 189 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமானத்துக்கு டெல்லியைச் சேர்ந்த விமானி பாய்வே சுனேஜா தான் பைலட் என்று தெரியவந்துள்ளது.
6 பேர் இருந்த விமானக் குழுவுக்கு, கேப்டன் சுனேஜா தான் தலைமை வகித்தார். அவருக்கு இதுவரை 6,000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த லியான் ஏர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியில் சேர்ந்தார்.
விபத்து குறித்து விமான தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர், ‘விமானம் ஜேடி610, புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. விமானம் விபத்துக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
ஜாவா தீவுகளுக்கு அருகே விமானத்தின் பாகங்கள் கிடைத்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணி அதிகாரி முகமது யவுகி, ‘விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், யாரேனும் உயிர் பிழைத்தார்களா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது. நாங்கள் உயிரோடு இருப்பார்கள் என்று வேண்டிக் கொள்கிறோம்' என்று கூறியுள்ளார்.
விமான விபத்துக்குக் காரணம் என்னவென்று தற்சமயம் சொல்ல முடியாது என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.