இலங்கை தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டார்கள் என ஸ்டாலின் பொய் பேசுகிறார் - எடப்பாடி
குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பில்லை என்பதை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தெளிவுப்படுத்திவிட்டனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர். இந்த சட்டத்தை பொறுத்தவரை இந்தியாவில் வாழ்கின்ற எந்த இந்தியர்களுக்கும் பாதிப்பு இல்லை. அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி. பாதிப்பில்லை.
இலங்கை தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்துவிட்டார்கள் என ஸ்டாலின் பொய் பேசுகிறார். 13 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்று தரவில்லை. இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்தது போல் நாடகமாடும் கட்சி திமுக.
கருணாநிதி சொன்ன வார்த்தையை நம்பி வெளியே வந்த இலங்கை தமிழர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். அவர்களை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் கருணாநிதியும், ஸ்டாலினும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அப்போதே ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். நான் பிரதமரை சந்தித்தபோதும் அதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளேன். தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சார்பில் தரப்படும் நலத்திட்ட உதவிகளும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் வலியுறுத்தினர். கொறடா உத்தரவின்படி தான் அதிமுக எம்பிக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டு அனைவரும் செயல்படுவார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் மதிப்பளித்து செயல்படக்கூடியவர்கள் அதிமுகவினர், என்று கூறியுள்ளார்.