தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ஆவின் பால் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால், அதன் விற்பனை விலையும் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 1 லிட்டர் பசும்பால் 28 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் 4 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், சில்லறை விற்பனையிலும் ஆவின் பாலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பால் வகைகளும் அட்டைதாரர்களுக்கும், அதிகபட்ச விற்பனைக்கும் அரை லிட்டருக்கு 3 ரூபாயும், ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பால் விலையை அரசு திடீரென்று உயர்த்தியதற்கு பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இதேபோல், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, பால் விலை உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை. தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நொடிந்து போய் இருக்கின்ற நேரத்தில், பசு, எருமை மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பால் உற்பத்தி விலையை உயர்த்தி தமிழக அரசு கொடுத்திருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், அதே நேரத்தில் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட அளவுக்கே, விற்பனை விலையும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விற்பனை விலையை அதிகமாக உயர்த்தியது சரி அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலேயே பால் விலை ஏற்றப்படுகிறது என்று அரசு கூறும் காரணம் ஏற்புடையதல்ல. அத்தியாவசிய பொருள் என்ற நிலையிலேயே பொது வழங்கல் முறையில் பால் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இதை லாப வணிக நோக்கில் பார்ப்பது அரசுக்கு அழகல்ல. இது கண்டனத்துக்குரியது. அதனால், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அதிமுக அரசு இதை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.