This Article is From Apr 21, 2020

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திருமா எம்.பி வலியுறுத்தல்

மக்கள் உழைப்பைச் சுரண்டுவதற்கு முயற்சிக்காமல், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் துணைபோகாமல் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைப் பாதியாகக் குறைத்திட வேண்டும்

Advertisement
தமிழ்நாடு Posted by

சர்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து நாடுகளும் முடங்கியுள்ள நிலையில் எரிபொருள் தேவைகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது. எனவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையினை 
குறைக்குமாறு மத்திய அரசினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான தொல் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு…

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பல்வேறு நாடுகள் முழு அடைப்பை கடைப்பிடிப்பதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க சந்தையில் நேற்று அது பூஜ்ஜியம் டாலருக்கு சரிந்தது. உலகச் சந்தையில் ஒரு பேரல் 15 டாலர் என்கிற விலையில் கச்சா எண்ணெய் இப்போது விற்கப்படுகிறது.

Advertisement

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்குக் காரணம் மோடி அரசின் வரி விதிப்புக் கொள்கைதான். 2014-ம் ஆண்டு மோடி பதவியேற்கும் போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.48 ரூபாய் மத்திய வரி விதிக்கப்பட்டது. டீசல் மீது லிட்டருக்கு 3.56 ரூபாய் விதிக்கப்பட்டது. தற்போது பெட்ரோல் மீது லிட்டருக்கு 22.98 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 18.83 ரூபாய் வரியும் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதன் பலன் இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு கிடைப்பதில்லை. மக்களுக்குக் கிட்டவேண்டிய பயன்களை மத்திய பாஜக அரசு வழிப்பறி செய்து கொள்கிறது. அப்படி வரிவிதித்து சேர்ந்த பணத்தை மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடாமல், கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்களை ரத்து செய்வதற்குப் பயன்படுத்துகிறது.

தற்போதும்கூட கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் அதனை மறைத்து வழக்கம்போல வரியை உயர்த்தி வழிப்பறி செய்யாமல், அதன் பலன் பொதுமக்களுக்குச் சேரும் வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திட மத்திய அரசு முன்வரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Advertisement

முழு அடைப்பில் தளர்வு செய்து சரக்குப் போக்குவரத்துக்கு அனுமதித்துள்ள மோடி அரசு உடனடியாக சுங்கக் கட்டணத்தை உயர்த்தியதோடு எல்லா சுங்கச் சாவடிகளிலும் வசூல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களைச் சுரண்டுவதே மத்திய அரசின் தலையாயக் கொள்கையாக இருக்கிறது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயிலன் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையாக சரிந்துள்ள நிலையில், வழக்கம்போல மக்கள் உழைப்பைச் சுரண்டுவதற்கு முயற்சிக்காமல், தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்குத் துணைபோகாமல், அனைத்தும் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையைப் பாதியாகக் குறைத்திட வேண்டுமென மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.  என தொல் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement